Friday, March 15, 2024

பெளர்ணமி

பெளர்ணமி


 ’ஏமாந்துட்டேன்…’ 

குரல் நெருங்கி வர அரை நிமிடத்திற்கும் மேலாயிற்று. வீடெங்கும் ஆட்களைத் தேடிச் சலித்தப் பூனை பசிக்காக இறைஞ்சிய சத்தம் அக்குரலுடன் சேர்ந்து ஒலித்தது. எனவே யாராகயிருக்கும்? காதில் விழுந்தது என்னவாகயிருக்கும்? குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அந்த குறுகிய நிமிடத்திற்குள் மூன்று நான்கு முகங்கள் வந்து போயின. அதில் இருவர் வருவதற்கான சாத்தியமேயில்லை. எனவே பாக்கியுள்ள ஒருவன் காரியவாதி. ஆக வேண்டியது முடிந்ததும் எந்த அடையாளமுமற்று மறைந்து விடுவான். அதுவரை அவன் போடும் வேடங்கள் அவனால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி என்பதைக் கண்டே பிடிக்க முடியாது. ஆகவே ஒரு வித எரிச்சல் முகத்தில் ஏறிவிட்டது. ஆனால் செருப்பை வாசலில் விசிறி அடித்தபடி - அது துடிப்பான சிறுவர்கள் போல எங்கோ கரணமடித்து விழுவதைப் பொருட்படுத்தாமல்- ஆவேசத்துடன் சரவணன் நுழைந்தான். சற்றும் அவனை எதிர்பார்க்காததால் திகைத்து எழுந்து  அந்த வேகத்தை மட்டுப்படுத்த வழி தெரியாமல் திண்டாடினேன். வியர்வை டீ சர்ட்டை வேறு நிறத்திற்கு மாற்றி விட்டிருந்தது. மின்விசிறியின் வேகத்தைக் கூட்டி வைத்து அமர வைக்கத் தோளைப் பற்றுகையில் கொசுவை தட்டுவது போல கையை தட்டி விட்டு ‘எல்லாமே போச்சு…’ என்றபோது மூச்சு சீரற்று இரைந்தது. தண்ணீர் புட்டியை  அவனுக்கு தருவதற்குள் அவரசமாக பிடுங்கி மேலே சரித்தான். அது மூக்கின் மீதும் மோவாயின் மீதும் சிந்திச் சிதற கடும் இருமலுக்கு பின் குடிப்பதை நிறுத்தினான். மறந்துவிட்ட குற்றவுணர்வுடன் மீண்டும் ‘ஏமாந்துட்டேன்…’ என்றான் அதே உக்கிரத்துடன். அப்போது தான் சற்று முன் வெளியே கேட்டது இதை தானோ என நினைத்தேன். உடன் யாராவது வந்திருக்கிறார்களா என தலையை மட்டும் வெளியே நீட்டி துழாவினேன். அவனது செருப்புகள் போதமிழந்த குடிகாரர்கள் போல திசைக்கொன்றாக மல்லார்ந்து கிடந்தன. வேறு யாருமில்லை.



அவனது எரியும் முகத்தைப் பார்த்தால் இந்த நாள் முழுவதும் வரும் வழியெங்கும் ஏன் அவன் உடலெங்குமே இந்த ஒற்றை வார்த்தை தான் நிறைந்திருக்கும் என்று தோன்றியது. இத்தகைய கோபம் ஊறிக் கிடப்பவர்களிடம் சமாதானத்திற்கு எதைச் சொன்னாலும் அது செல்லாக்காசாவே மாறும் என்பதால் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து காலுக்கடியில் பதுங்கி கிடக்கும் பூனையின் அன்னிச்சையான வாலசைவில் கவனத்தைத் திருப்பினேன்.


யாருமில்லாத வீட்டில் அவன் அறைகளெங்கும் யாரைத் தேடிக் கொண்டிருக்கிறான்? ’ஊருக்கு போயிருக்காங்கடா..மொதல்ல ஒக்காரு..’ அப்போதும் பதற்றம் தணிந்திருக்கவில்லை.கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு தான் என் முன் கடை விரிக்கப்பட்டிருப்பதே அவன் கண்களுக்கு தெரிந்தது. ஏதேனுமொரு விஷயம் மனதிற்குள் பூதாகரமாக ஆட்கொண்டுவிட்டால் எதிரே உலகமே திரண்டு வந்தாலும் அது ஒரு புள்ளியாகத் தான் திரிந்து தெரியும் போலும்.  எதையுமே லாவகமாக சமாளிக்கத் தெரிந்தவனா இப்படி பேதலித்து அமர்ந்திருக்கிறான்..! அவன் கண்கள் நான் ஊற்றி வைத்திருந்த கிங் லூயிஸ்(ப்ளூ) பிராந்தியிலேயே நிலைத்தது. அவன் நாளை காலை வரை உற்றுப் பார்த்தாலும் பிரச்சினையில்லை. பழக்கமில்லாதவன் பங்குக்காக வரப்போகிறான்? முட்டைப் பொரியலும் நொறுக்குத் தீனிகளும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த இசையை அவனுக்காகவே சற்று முன் தான் அணைத்தேன். அவன் இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கும் உலகத்துக்கு நேரெதிராக உல்லாச உலகத்தின் பிரதிநிதியாக அமர்ந்திருந்தது அவனுக்கு சுயகழிவிரக்கத்தையும் என் மீது கடும் பொறாமையையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

 

‘குடிச்சு செத்துப் போ..இந்த கேடுகெட்ட உலகத்துல வாழாத..!’ என வீடே எதிரொலிக்க சத்தமிட்டது கேட்டு பூனை மிரண்டு எழுந்து ஒருமுறை அவனைப் பார்த்த பின் அலட்சியமாக திரும்பி சாவகாசமாக நடந்து சென்றது. 

 

‘சும்மா குதிக்காத…தலயும் இல்லாம...காலும் இல்லாம..விஷயத்தைச் சொல்லுடா மயிராண்டி..’ சூடு குறைந்து விட்டிருக்கும் முட்டைப் பொரியலை எடுக்கலாமா வேண்டாமா எனும் ஊசலாட்டத்தில் தவித்தேன்.


என்னை பஸ்பமாக்கி விடுவது போல முறைத்தபடி கண் எடுக்காமல் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் வழுக்கை விழத்தொடங்கி விட்டது. நடுமண்டையிலும் குட்டி தோசை அளவுக்கு வழுக்கை. அதை நான் கண்ணை மறைக்கும்படி விழும் முடியை ஒதுக்கியபடியே சொன்னதால் எரிச்சலில் ஷோபாவிலிருந்து உந்தப்பட்டவன் போல துள்ளி எழுந்தான்.


‘சாகறேன்…நான் சாகறேன்..’ கதவைப் பார்த்து ஓடினான்.


’அது உன் இஷ்டம். காரணத்தை சொல்லிட்டு செத்துத் தொலைடா நாயே.. கடைசியா என்னப் பாக்க தான் வந்திருக்க..ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் ஜட்டியோட ஒக்கார வைக்கறதுக்கா..’ பரிதாபமில்லாத குரலில் சொன்னதும் அக்காட்சியை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தேன். ’ஐய்யோ’ என உள்ளூர அலறி அந்த கற்பனையைச் சகிக்க முடியாமல் பிராந்தியைத் தொண்டைக்குள் கவிழ்த்துக் கொண்டேன்.


‘ஒரு மாசமா வீட்ல நிம்மதியேயில்லை. ஓயாத சண்டை..‘ அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘உமாவுக்கும் எனக்கும் ஒத்துவர மாட்டேங்குது..என்னென்னமோ செஞ்சு பார்த்தும் ப்ராப்ளம் பெரிசா ஆகுதே தவிர தீரல..’  சுமந்து வந்த பாரத்தை பாதி இறக்கி வைத்த ஆசுவாசத்தில் பெருமூச்சுடன் பின்னால் சரிந்தான்.


வழக்கமானதை பெரிது படுத்துகிறான் என்று தோன்றியது. ‘தெளிவா சொல்லு..’ என்றதும் அவன் கீழுதட்டைக் கடித்து எப்படி தொடங்குவது என போராடிக் கொண்டிருந்தான்.


‘அவ கூட தனியா இருந்து இரண்டு மாசம் ஆச்சு..ரெண்டு பேருமே எவ்வளவோ ட்ரை பண்ணியும் செட் ஆகல..’ என்னைப் பார்ப்பதைத் தவிர்க்க முகத்தை திருப்பிக் கொண்டான்.


‘கேனத்தனமா உளறாத..பையனுக்கு டென்த் எக்ஸாம். அவன் படிக்கிறதை பார்ப்பாளா இல்ல நீ சொன்னவுடனே….’


உமா சினேகமான பெண். கலகலப்பானவள். என்னிடம் உரிமையுடன் சண்டையிட்டு பேசக் கூடியவள் விவேகமானவளும் கூட. வயதுக்கு சம்பந்தமில்லாத குறும்புகள் செய்யக் கூடியவள். எனவே பேச்சை அந்த இடத்திலேயே நிறுத்தினேன்.


‘எக்ஸாம் முடிஞ்சு ஒன்றரை மாசம் ஆச்சு..’ என்றான் எங்கோ பார்த்தபடி.


‘கிறுக்குப் ..…. ’ வசவை வாய்க்குள்ளேயே நிறுத்தி விட்டேன். ஆனால் அவன் தலைநிமிரவில்லை. தரையைப் பார்த்தபடி ‘உன் வீட்ல எப்படி..?’ என்றான்.


காயம் கடுமையானது எனப் புரிந்தது.


‘ஏன் இவ்வளவு வெக்கையா இருக்கு….’ பேச்சை மாற்றியும் கூட விடுவதாகயில்லை. மேலும் சில மிடறுகள் உள்ளே தள்ளினேன். குரூரமான ஒரு உவகை ஏற்பட்டது. அற்பப் பயல். உமாவைப் பெண் பார்த்து வந்த செய்தியைக் கூட யாருக்குமே சொல்லவில்லை. தன்னைச் சுற்றி இருந்தவர்களிலேயே அழகியை கைப் பிடிக்கிறோம் என்கிற மிதப்பில் அலைந்து கொண்டிருந்தான். எங்குமே நிழலாகச் செல்வான். உடன் நடந்து வருகையில் பூரிப்பு கண்களில் மின்னும். உமா இருக்கிற இடத்தை விகசிக்கச் செய்து விடுகிறவள் தான். இன்று குற்றுயிராக வந்து அமர்ந்திருக்கிறான். அடுத்த சுற்றுக்கு ஊற்றி வைத்து விட்டு கம்பீரமாக நிமிர்ந்து புழுவைப் போல துடித்துக் கொண்டிருப்பவனை நோக்கி


‘வீக்லீ டூ டைம்ஸ்..’ கேட்டதும் சரவணனின் உடம்பு ஒரு முறை சொடுக்கி அடங்கியது.


இன்னும் ஊடுருவித் தாக்க வேண்டும் என்று தோன்றியது. ‘இது நைட் கணக்கு மட்டும் தான். பசங்க வீட்ல இல்லைனா பகல்ல கூட சில சமயம் நடக்கும்’ நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தான். எனக்கு பனிரெண்டும் ஒன்பதும் படிக்கிற பிள்ளைகள் இருந்தனர். மிதமான போதை மனதிற்கு  சாட்டையை கொடுத்திருந்தது. விளாசலாம் என்று பட்டது. ‘அவ வேணும்னு கேட்டானா மறுபடியும் நடக்கும்..நான் கேட்டாலும் தான்..’ என்றேன்.


அவன் தலைநிமிரவேயில்லை. ஏதோ முனகினான். அவன் உலவிக் கொண்டிருக்கும் உலகிலிருந்து இங்கு மீண்டு வர கொஞ்ச நேரமாகுமென நினைத்து தம்ளரை கையிலெடுத்துமே ‘உமா என்னை தொட விட மாட்டேங்குறடா..’ சரவணன் கூனிக்குறுகியபடி சொன்னான். திகைத்து விட்டேன். அடுத்த நொடியே அவன் ஏன் இன்னும் அழாமல் இருக்கிறான் என்று தோன்றியது. பார்வையை மடைமாற்ற ஜன்னலலைத் திறந்ததும் பிரகாசமான வெளிச்சம் படர்ந்தது. என்ன இது..! ஒளி, வெள்ளம் போல அறையை நிறைத்து விட்டதே..! திரைச்சீலையை இழுத்து விட்ட பின் புட்டியில் நீர் பிடித்து வந்தமர்ந்தேன்.


முகத்தை துடைத்தபடியே ‘எப்ப பாத்தாலும் ஏதோவொன்னை சொல்றாளப்பா..எத்தன நாள் தான் பொறுத்துக்கறது? எல்லாம் செட் ஆகியிருக்கும். தலவலினு படுத்திருவா..அடுத்த நாள் சேனல் மாத்துறதுல சண்டை வந்திரும். போன போகுதுனா மறா நாள் சமையல்ல சொதப்பி வைச்சிருப்பா..கோவத்துல கத்திட்டுப் போய் படுத்துக்குவேன். இன்னொரு நாள் அவங்கம்மா வூட்லயிருந்து போன் வந்திரும். ஊரு ஒலகத்துல இல்லாத நாயம் அப்படியென்னத்த தான் ஆத்தாளும் மகளும் அளப்பாளுகளோ..! அப்படியே போயிரும் அந்த வாரமே..என்னடா இப்படி அலையறோம்னு அடுத்த வாரம் முழுக்க அவகிட்டயே போக மாட்டேன். அதுக்கு பிறகு செல்லமா பேசினாலும் மூஞ்சியை தூக்கி வைச்சிக்கிட்டா.. ஆசையா பின்னால போய் கட்டிப் பிடிக்கறேன். என்கிட்ட ஏதோ நாத்தம் அடிக்குதுங்கறா…என்ன நினைச்சாலோ அடுத்த நாள் பையனை ஹாஸ்டல்ல இருந்து வரச்சொல்லி பக்கத்துல படுக்க வைச்சுட்டா..’ அதற்குள் அவனுக்கு இருமல் வந்து விட்டது.


‘ஒன்றரை மாசமெல்லாம் சின்ன கேப் தானே..அதுக்குப் போயி..நம்ம முரளிய பாரு. பெத்த பொண்ணுக்காக வேற கல்யாணம் பண்ணிக்காம அவ கூடவே இருக்கறான். நீயென்னடான்னா..’ இதெல்லாம் அவன் காதிலேயே விழவில்லை. அவர்கள் இருவருக்கும் ஒத்துவராது. வேறு யாரையாவது சொல்லியிருக்கலாம்.


’ஆனது ஆச்சுனு..’ குரலில் வேகம் வந்துவிட்டிருந்தது ‘இன்னைக்கு அவளை அப்படி இறுக்கி தூக்கீட்டேன். ச்சீ..னு தள்ளிவிட்டுட்டு வேற யாரோ பேரைச் சொல்றாடா மாமா..’ என்றபடி தரையில் விழுந்து தலைதலையாகப் போட்டுக் கொண்டான். வாயிலிருந்து நீர் ஒழுகி அவன் சட்டையை நனைத்தது.


பேச்சிழந்து ஸ்தம்பித்து நின்று விட்டேன். இந்த தாக்குதலை என்னாலேயே தாள முடிந்திருக்கவில்லை. தேற்றுவதற்கு எதுவுமற்று கையிலாகாதவனாகத் தோளை மெதுவாகத் தொட்டு எழுப்பினேன். கால்களைக் கட்டிக் கொண்டு ‘பயமாயிருக்குடா மாமா..காப்பாத்துடா..’ என்ற போது உமாவை மனதிற்குள் காறி உமிழ்ந்து அவனை அப்படியே அள்ளிக் கட்டிக் கொண்டு முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்.


மெரூன் ஆக்டிவா உறுமலுடன் வாசலில் நின்று அணைந்தது. சரவணன் பதறி எழுந்து அறைக்குள் போய் தாழிட்டுக் கொண்டான். கலைந்த உடையும் சோர்ந்த முகமுமாக ஆனால் உறுதியான காலடிகளுடன் உமா உள்ளே வந்தாள். அவனை தேடி அலைந்திருக்கிறாள் என்று பட்டது. வெளியே செருப்பைப் பார்த்ததும் கதவைத் தட்டாமலேயே நுழைந்திருந்தாள். அவளை தூரத்தில் கண்டதுமே சகலத்தையும் ஒழுங்கு செய்து விட்டிருந்தேன்.


’புஜ்ஜிப்பா வெளிய வாங்க..’ அவள் அவனை அப்படித் தான் செல்லமாக அழைப்பாள். ஒருமுறை கூட சுமதி இப்படி கொஞ்சி கூப்பிட்டதில்லை என்பது அந்த நிமிடத்தில் நினைவில் இடரவே எரிச்சலுடன் வேண்டாவெறுப்பாக மிரட்டும் தொனியில் அவனை விளித்தேன். ‘அவ மூஞ்சியிலயே முழிக்க மாட்டேன். அவளப் போச்சொல்லு..’ இதையே வேறு வேறு சொற்களில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தான்.


அவளுக்கு விளங்கிவிட்டது. அந்தரங்கமான விஷயம் இப்படி பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டதே என்ற குமைச்சலும் ஆதாங்கமும் அவளை ஓரிடத்தில் நிற்க விடவில்லை. செய்வதறியாது அங்கேயே அப்படியே அமர்ந்து பெருங்குரலெடுத்து ஓலமெழுப்பி அழுதாள்.


’ப்ளீஸ் உமா எழுந்திரு..அழாத ப்ளீஸ்..’ என்பதன்றி வேறென்ன சொல்வதென தெரியவில்லை. சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவி வந்தாள். மின்விசிறியின் வேகத்தை கூட்டி வைத்து நிதானமாக நடந்து நேரெதிரே உட்கார்ந்தேன்


‘இந்தாளு சொல்ற மாதிரி யென்ன பேர் சொன்னன்னே யெனக்கு தெரியாதுணா.. சொன்னா நம்புங்கண்ணா..யெனக்கு ரெண்டு மாசமா மனசே சரியில்லை. ஆனா இவன் நினைக்கற மாதிரியில்லணா..’ நிறுத்தினாள். தேம்புவது போல குரல் தழுதழுத்தது. தன் கடந்த காலம் எதிர்சுவரில் படமாக ஓடுவது போல அதை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.


‘ஸ்கூல் விட்டு நடந்து போற இடத்துல எல்லாம் எங்கப்பா நிக்கற மாதிரியே இருக்கும். அவரோட கண்ணு எங்கிருந்தோ உத்துப் பாத்துக்கிட்டே இருக்கறாப்ள தோணும். ஒரு வேத்து ஆள் என் கூட பேசிட்டா போச்சு வீடு ஏறிப் போய் எங்கப்பா மிரட்டிட்டு வருவாரு. ஸ்கூல் ஹெட்மாஸ்டர்ங்கறதால ஊருக்கே அவர்னா மரியாதையும் பயமும். அப்ப தான் ஒருத்தன் என் பின்னால சுத்திக்கிட்டு இருக்கறதா என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. நிமுந்தே பாக்க முடியாது. பயமாயிருக்கும். ஈவ்னிங் கோ-கோ வெளையாட்டிக்கிட்டு இருக்கும் போது வந்து கையை கிழிச்சுக்கிட்டு ‘லவ் பண்றேன்..’னு சொன்னான். மயக்கமா வந்திருச்சு. எட்டாவது படிக்கறப்போ என்ன தெரியும்னா நம்ம ஜென்ரேசன்ல. அப்பா காதுக்கு விஷயம் போயிடுச்சு. அவனை ஆள வைச்சு அடிச்சு ஆஸ்பிட்டல் சேத்துட்டாரு. ஆனா அவன் அடங்கல. அவனே ரவுடிணா. பாக்கை போட்டுட்டு தண்ணி அடிச்சுட்டு ஏரியாவுல மிரட்டிக்கிட்டு திரிவான். சுத்தமா பிடிக்காது. ஒரு பொறந்த நாளுக்கு எனக்கு ரோஸ் பிடிக்கும்னு தெரிஞ்சு தெருவுல நின்னுட்டு போற வர்றவுங்களுக்கெல்லாம்  கொடுத்துட்டு இருந்தான். கேக்கும் ஸ்வீட்சும் தனியா கொடுத்துட்டு இருந்தான். கோவில்ல ஸ்பெஷல் பூஜைக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தான்.  எங்க போனாலும் வருவான். எனக்கு பாதுகாப்பா இருக்கறானாம். வேற ஒரு கண் என்னை பாக்க திரும்பிச்சுன்னு தெரிஞ்சா அவ்லோ தான். எங்கப்பா ஒருபக்கம் இவன் ஒருபக்கம். எனக்கெப்படிணா லவ் வரும்? வெறுத்துப் போய் ஓடி ஒளிஞ்சுக்குவேன். அப்படியே வருஷம் போச்சு. அவன் மாறல. கை காலெல்லாம் கிழிச்சுட்டு வந்து நிப்பான். யாரையாவது ரோட்ல போட்டு உதைப்பான். கல்யாணம் முடிச்சு வந்து ஊருக்கு போனாலும் விடாம தொரத்துவான். தூது விடுவான். அவன் கூட பேசினதே கிடையாது. இவருக்கு லண்டன்ல ஆன் சைட் கிடைச்சதும் கிளம்பிட்டேன். போன வருஷம் அவன் தற்கொலை பண்ணிட்டானாம். என் பேரை சொல்லிக்கிட்டே இருந்தானாம். ஒன்றரை மாசம் முன்னே தான் எனக்கு தகவல் சொன்னாங்க. யாருமே எனக்கு இதை தெரியாம பாத்துக்கிட்டாங்க போல. அவன் கிட்ட பேசி யாரையாவது கல்யாணம் பண்ண சொல்லி இருக்கலாம்ங்கற கில்ட் தான் என்னை கொல்லுது. ஆனா அதுக்கும் இவர் சொல்றதுக்கும் சம்பந்தமில்லைணா..’ குரலில் அவ்வளவு நிதானம். ஏதோ புத்தகத்தில் இருந்ததை பார்த்து படித்தது போன்ற தெளிவான குரல்.


‘ஆனா ஏதோவொரு தொந்தரவு இருந்துக்கிட்டே வந்தது. எங்களை யாரோ நெருங்க விடாம பண்றாங்கனு ஒரு உள்ளுணர்வு இருந்ததுணா..நம்புனா நம்புங்க. அவன மாதிரியே ஒரு தோற்றம் என் பெட்ரூம்ல உட்கார்ந்துட்டு இருந்ததை பாத்தேன். யார்கிட்ட என்ன சொல்லட்டும்? வீட்டை காலி பண்ணலாம்னா என்ன காரணம் சொல்றது? அதுவும் சொந்த வீடு. அவனால இவருக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா..’ தன் மடியில் முகம் புதைத்து அழுதாள்.


சரவணன் வந்து நின்று கொண்டு தான் இருந்தான். அவள் அவன் பக்கம் பார்க்கவேயில்லை. ’நமக்காக ஒருத்தன் செத்துப் போயிட்டான்னு கேள்விப்பட்டா எப்படிணா இருக்கும். ஆனா அவன மனசுல நினைச்சதே இல்ல..’ என்றதும் ஒரு துர்வாடை அறைக்குள் சூழ்ந்தது. அது சரவணனிடமிருந்து எழுந்த நாற்றம் என்பதை அவள் உணர்ந்தாள். சேலையில் தீப்பிடித்து போல அங்குமிங்கும் நடந்தாள். ஓடினாள். வந்தமர்ந்தாள். திடீரென்று ரோஜாக்களின் நறுமணம் கமழத் தொடங்கியது. கிறக்கமூட்டும் வாசனை. உடலெங்கும் நிறைத்துக் கொள்ள முடியாதா என ஏங்க வைக்கும்படியாக இருந்தது அந்த மணம். திரைச்சீலை அசைய அசைய வாசனையின் சுகந்தம் கூடியபடியே இருந்தது. உமா விதிர்விதித்து எழுந்தாள்.


‘சத்யா…சத்யா…எங்கள விட்டுடு…உன்ன மனசார நினைச்சவ இல்ல நானு…நம்புங்க சத்யா..’ என குமுறி குலுங்கி அழுதாள். சரவணன் நிமிர்ந்து என்னை பார்த்தான். இந்த பெயரை தான் சொல்லியிருக்க வேண்டும்.


சில நிமிடங்களில் அந்த மணம் இல்லாமல் ஆயிற்று. பழையபடி காற்றில் வெக்கையின் அனலடித்தது. அங்கிருந்த எதுவோவொன்று வெளியேறிய காற்றோட்டம். நெடுநாள் வலி கொடுத்த புண் மறைந்து விட்டது போன்ற நிம்மதி. மெதுவாக எழுந்து வெளியே போனேன். நிழல் போல அவனும் தொடர்வது தெரிந்தது. உமாவால் உண்மையாக அவனை மறக்க முடியுமா? அவள் அவளுக்குள் போட்டுக் கொள்ளும் வேடம் தான் இதுவா? இல்லை அவள் சொல்வதில் உண்மையாகத் தான் இருக்குமோ என்னமோ..! அவளே அதை அறிவாள்.


இந்த புழுக்கத்திலிருந்து விடுபட முன்னால் சென்று கேட்டைத் திறந்ததும் தெருவே ஒளியால் குளிப்பாட்டப்பட்டது போல மிளிர்ந்து கிடந்தது. அவ்வளவு வெளிச்சத்தைப் பார்த்ததும் வாழ்க்கையில் இழந்தவை சார்ந்த துயரம் எங்கிருந்தோ வந்து பீடித்தது. கண்ணீர் கோர்க்க உலகம் ஒருமுறை மங்கலாக தோற்றம் தந்தது. பொத்துக் கொண்டு அழுதுவிடுவேனோ என அஞ்சினேன். துடிக்கும் மனதை அடக்க  தலை நிமிர்ந்து பார்த்தேன். நிலவின் துணையிருந்தால் எந்த துயரத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.


பிறகு சற்றும் தாமதிக்காமல் அவனுக்கு பின்னால் உள்ளே அமர்ந்திருந்தவளை நோக்கி , ‘உமா இங்க வா..’ என்றதும் மறுகேள்வி இன்றி எழுந்து வந்து கேள்விக்குறியுடன் நின்றாள். நாயின் ஊளையொலி எங்கோ கேட்டது.

மேலே காட்டி ‘இன்னைக்கு பெளர்ணமி’ என்றேன், நாக்கு தழுதழுத்து விட்டது.

முகம் ஒளிர ஒரு கணம் வானத்தை பார்த்தவள் நெக்குருகலுடன் இறைஞ்சியபடி கைகூப்பி வணங்கினாள்.

அவளது முகம் கனிவு கொண்டதாக மாறிக் கொண்டிருந்தது. கன்னங்களில் நீர் வழிய அதனிடம் சரணடையும் சித்தத்துடன் ஏதோ முனகினாள்.

உமா தன் மூடிய கண்களை இப்போதைக்கு திறக்க மாட்டாள் என்பதை புரிந்தவனாக அவள் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன்.



Thursday, October 26, 2023

பதில்


பதில்


                                                                                   

அம்மாவை இழுத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டு முன்சீட்டின் கம்பியைப்பற்றி பாதி எழுந்து நின்று வனிதாவுக்கும்  குழந்தைகளுக்கும் இடம் கிடைத்து விட்டதா என்று பார்த்தான். அம்மாவை அவளுக்கருகில் விட்டிருந்தால்! உள்ளே நடுங்கமெடுத்து அடங்கியதுவனிதா மூன்றாமவளுக்கு அரைடிக்கெட் எடுக்கத் தோதாக மடியில் கிடத்தியிருப்பது தெரிந்தது. ஜன்னல் அருகில் அமர மூத்தவளுக்கும் இரண்டாமவளுக்கும் வாக்குவாதம் முற்றி நகத்தால் பிராண்டியும் கிள்ளி வைத்தும் வழக்கமான ரகளையைத் தொடங்கியிருந்தனர். மூன்றாமவள் மடியிலிருந்து நழுவி இன்ஜின் அருகில் கம்பி போல நீண்டிருப்பது என்ன எனச் சோதிக்க  வழுக்கி, இறங்க கை கால்களை உதறி அடம் பிடித்தாள். கூட்டம் நெரிபட்டுக் கொண்டிருந்தது. புழுக்கம் வேறு. யாருக்கு விழுகிறது என்பது தெரியாமல் மாறி மாறி மூவரையும் விளாசினாள். எவ்வளவு அடி வாங்கினாலும் முதலாவது  அழுதால் சத்தமே வராது. இரண்டாவது நேர் மாற்றி. கிடைப்பதையெல்லாம் எறியும். இப்போது கையிலிருந்த பிஸ்கட்டை கோபத்துடன் வெளியே வீசிற்றுகீழே மணிக்கட்டைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிந்த கண்டக்டர் பீடி இழுத்தபடி நிற்கும் டிரைவரிடம் ஜாடை காட்டினான். அவன் ஏறியதும் வீசிய பீடி நாற்றத்தால் முகத்தை வெடுக்கென்று வனிதா சுளித்தபடி திரும்பினாள்அன்னாச்சிப் பழத் துண்டுகளை மகனும் அம்மாவும் தின்று கொண்டிருப்பது ஆட்களுக்கிடையே தெரிந்த சிறுசந்து வழியாகத் தெரிந்தது. அவன் தண்ணீர்புட்டியின் மூடியைத் திருகித் தயாராக வைத்திருந்தைக் கண்ட எரிச்சலில் மடியிலிருந்து மீண்டும் நழுவியவதற்கு அடி விழுந்தது.


குழந்தைகளின் கத்தல் கேட்டதுமே அவ்வளவு கூட்டமும் இரைச்சலுடன் மோதி நிற்பதை மறந்துஅடியேய்கொன்னுகின்னு போடாதவலத்தியிருக்கறா பாரு.. த்தூ..நானுந்தான் பெத்தேன்.. உட்காருனா உக்காரோணும்..கொண்டுட்டு வான்னா வெட்டிக்கிட்டு வரோணும்..’ என்றாள்.


வீடாக இருந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருக்கும். நல்லவேளை வனிதாவுக்கு கேட்கவில்லை என நினைத்து கிருஷ்ணன் அம்மாவின் கையை அழுத்திசும்மா இரு…’ என இறைஞ்சும் குரலில் கெஞ்சினான்.


ஆமாஎன்னிய அடக்குஅவள ம்-ன்னு ஒரு வார்த்தை கேட்ராதபொண்டாட்டி பொச்சுக்கு பின்னாலயே திரிஞ்சுக்கிட்டிரு..’ அங்கேயே பஸ்ஸை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்ளலாமா என்று தோன்றியது. அருகிலிருந்தவர்களின் நமட்டுச் சிரிப்புகள் உயிரையே பிடுங்குவது போலிருந்தன. பீறிட்டு வந்த காற்று முகத்தில் அறைந்ததும் சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டுக் கால்களைத் தளர்த்தி இவை ஏதும் கேட்காத இடத்திற்கு போய்விட நினைத்தவன் போல கண்களை மூடிக் கொண்டான்.


பொத்தென மடியின் மேல் எதுவே விழுவது போலிருந்தது. வனிதா மூன்றாமவளைக் கூட்டத்தை விலக்கி ஒற்றைக் கையாலேயே தூக்கி வந்து அவன் மேல் போட்டிருந்தாள். நெற்றியெங்கும் ஊறிய வியர்வையில் முடிகள் ஒட்டிக் கொண்டிருந்ததும்  பொட்டு சற்றே அழிந்திருந்ததும் அவளுக்கு விளக்க முடியாத அழகைத் தந்திருந்தன. சிரித்தபடியே ஜாடை காட்டுவதற்குள் அம்மாவின் காதருகே குனிந்துமூடிட்டு வாஒன்ர பவுசையெல்லாம் ரோட்ல இழுத்து வுட்டுப் போடுவன்..’ என்ற பிறகு அவனை முறைத்தபடியே முன்னால் சென்றாள்.


பயந்து மறுபடியும் சுற்றிலும் பார்த்தான். அம்மா கண் விழித்துஎன்ன சொன்னாஇப்ப வந்து என்னமோ சொன்னாளே..மூடு கீடுன்னு…’ எனச் சண்டை போய்விடுமோ எனத் துழாவினாள். இந்த வயதிலும் காது என்னவொரு துல்லியம். அதிலும் மல்லுக்கட்ட என்றால் எப்படி தான் கேட்குமோ..! ஸ்ஸப்பா..  இப்போது சரியாக கேட்கவில்லை போலநல்லவேளை.. தூங்கி விட்டாளா! ’ஒன்னுமில்லை. உன்ற வாயில போயிறப் போகுது. மூடித் தூங்கச் சொல்லுங்கனுட்டு போறா..’என்றான். சமாளித்து விட்டோம் என்ற நிம்மதி.


என்ற வாயில என்ன யானை கூட போகும் உனக்கென்னடீ…’ என மீண்டும்  சத்தம் போட்டாள். ஹாரன் ஒலி அதை அமுக்கியது. டிரைவர் திரும்பி பார்த்து விட்டு கியரை மாற்றினார்.


இந்த எட்டு வருடங்களில் வனிதா சீராடி சென்றவையனைத்துமே அம்மாவின் ஏச்சுகளை பொறுக்க முடியாமல் தான். சமாதானப்படுத்திக் கூட்டி வந்தாலும் சில தினங்கள் மட்டும் அமைதி நிலவும். பிறகு அம்மாவே அவளை வைவது போலபழைய குருடி கதவைத் திறடி..’ கதை தான். கடிந்து பேசினால் தெருவிலுள்ள வீடெங்கும் போய் அமர்ந்து அவனை வளர்த்து ஆளாக்கினக் கதையை அழுகையினிடையே ஒப்பாரி போல இழுத்து இழுத்து பேசிக் கொண்டிருப்பாள். ஐந்து வயதில் முண்டச்சியாக நல்லது கெட்டதுக்கு போகாமல் ஆலும் பாலும் தின்னாமல் ஆளாக்கின அதே கதை. செல்போனில் சொந்தங்களுக்கெல்லாம் அழைத்து இப்படி ஆகிப் போனேனே என பிலாக்கணம் வைப்பாள். வாய் தான் அவளை வாழ வைத்தது. வெவ்வேறு ஊர்களின் சந்தையில் அந்த வாயால் தான் வியாபாரம் பிடித்தாள். ஒரே மகனை கால்களுக்கிடையில் சொறுகி வைத்துக் கொள்வாள். வனிதாவின் வீட்டில் சொன்ன நகையை விட இரண்டு பவுன் குறைவாகச் செய்ததிலிருந்து தொடங்கியது. ஆனால் இவ்வளவு சண்டைகளுக்கிடையிலும் வீட்டில் அவள் வேலைகளை சேலையை கால் முட்டி வரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நொட்டை சொன்னவாறே பாதி செய்து தருவதும் இதே அம்மா தான். அரசு பேருந்தில் நடத்துனருக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றதும் அலைந்து திரிந்து விசாரித்து வந்து ஐந்து லட்சம் லஞ்சம் கேட்கிறார்கள் எனச் சொன்னான். மறு பேச்சே இல்லாமல் எங்கோ வாங்கிப் போட்டிருந்த இடத்தை விற்று அந்த வேலை கைக்கு வர ஏற்பாடு செய்தாள். ஆனால் வேலை முடிந்து வந்தால் வீடு நரகம் போலிருக்கும். சட்டை கழற்றுவதற்குள் புகார் படலம் ஆரம்பம் ஆகும். பல சமயம் பாதிச் சோற்றிலேயே எழுந்து போனதுமுண்டு. உடன் வண்டி ஓட்டுபவரிடம் புலம்பிய போது


ரெண்டு பக்கமும் சரின்னு கேட்டுக்கோ..காது கேட்கலைன்னு நினைச்சுக்கோ..யாருக்காவது சப்போர்ட் பண்ணிட்டேன்னா அவ்லோ தான். குடும்பத்தை ஓட்டறதுன்னா பஸ்ல டிக்கெட் கொடுக்கற மாரி சுளுவுன்னு நினைச்சுட்டயா...அம்மாவ அதட்டுனாலும் போச்சாது. ஆனா கட்டுனவகிட்ட ரொம்ப மொரண்டு பேசிறாதேஅப்பறம் ராத்திரி கையை போட்டா வெடுக்குன்னு தட்டி வுட்ருவா..’ எனக் கூறிச் சிரித்த பிறகு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டுஎன்னயெல்லாம் போர்வை கால்ல சிக்கிருச்சுன்னு சொல்லியே எவ்ளோ தடவை ஒதைச்சிருக்கான்னு தெரியுமா..அப்பறம் நானும் தெரியாதவன் மாரி அவள இந்த பக்கம் புடுச்சு இழுத்து ஆக வேண்டிய சோலிய பாக்கறது தான்..’ எனக்  கண்ணடித்தார்.




அதையும் செய்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இரண்டில் ஒன்று நெருப்பாக இருந்தால் நீர் தெளிக்கலாம். ஆனால் கச்சை கட்டிய சேவல் போல கொக்கரித்து கொத்த திரிந்தால்!  வீட்டிற்கே போகாமல் ஊரே உறங்கிய பின் கதவை தட்ட வேண்டியது தான். இதில் கசந்து ஏதேனும் சொல்லி விட்டால் அவ்வப்போது கோபித்துக் கொண்டு அம்மா கோவில் வாசலில் எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வாள். காலில் விழாக்குறையாகக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். உறவினர் வீடுகளில் விட்டு வந்தால் இரண்டாவது நாளே பையோடு வீட்டில் உட்கார்ந்திருப்பாள். ஒரு சொல்லும் தாளாதவள். ஏதோ சொல்லிவிட்டாள் என்பதற்காக சொந்த தங்கையிடம் பேச்சை மட்டுமல்ல உறவையே முறித்துக் கொண்டவள்.


இரண்டு பெண் பிள்ளைகளையடுத்து மூன்றாவதைச் சுமந்த போது அச்சம் கிருஷ்ணனின் ஒவ்வொரு மயிர்காலிலும் ஊடுருவியது. இதுவும் பெண்ணாக இருந்தால்! வனிதாவுக்கு அதை நினைக்கவே முடியவில்லை. நித்தமும் சொல்லாலேயே சாகடித்து விடுவாள். கலைத்து விடலாம் எனக் கெஞ்சினாள். அவன் இருவரது ஜாதகத்தையும் தூக்கிக் கொண்டு போனான்.


பையனா இருந்தா அப்பன் உசுருக்கு ஆபத்து. பொண்ணுனா ஐஸ்வரியம் தான். ..’ என்றார். பிறகு அதை எப்படி தன்னால் கேட்க முடிந்தது என திகைக்கக் கூடியதை அவனையறியாமலேயே கேட்டு விட்டான், ‘அம்மாக்கு அப்பப்போ ஒடம்புக்கு கேடு வந்திருது(பொய்)..ஆஸ்பத்திரி செலவு வேற ஆகிட்டே இருக்கு(மாபெரும் பொய்)..’ என்றதும் மனது ஆயத்தமாகிவிட்டதை உணர்ந்தான். பிறகு மெல்லஆயுசு எப்படி?’ என இழுத்தான்.


ஒடம்புக்காஅப்படியொன்னும் தெரியலையேஇன்னும் பத்து பதினைஞ்சு வருஷம் கின்னு இருப்பாங்க. பேரன் பேத்தி பாத்துட்டு தான் கண்ணை மூடுற யோகம்..’


அவன் ஏதும் பேசாமல் எழுந்து வந்தான். பெண் பிறந்து இல்லாத சண்டைகளெல்லாம் நடந்தாகிவிட்டது. அதன் பிறகு தான் அவனுக்கு அரசு வேலையும் வாய்த்தது. அதை சொன்ன போது கொஞ்சம் சமாதானம் ஆகி விட்டாள் என்று பட்டது. இந்த அலங்கோல வாழ்க்கையிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதொன்றே அவனது முதற் கவலை. பேருந்துகளில் மருமகள்களின் அருகில் அமர்ந்து பேசியபடியே வரும் மாமியார்களைப் பார்த்தால் அவர்களுக்கு டிக்கெட் கொடுக்கக் கூட மனது வராது. ஆசையுடன் பார்த்துக் கொண்டே நிற்பான்.


சென்ற வாரம் நடந்த ரகளையில் தெருவே வீட்டின் முன் திரண்டு விட்டது. பல மாதங்கள் யோசித்து வைத்திருந்ததை , தயங்கிக் கொண்டிருந்ததை செய்வதைத் தவிர வேறு வழியேயில்லை. ஒவ்வொரு முறையும் அத்திட்டம் மனதில் வரும் போது உடம்பே நடுங்கும். அம்மாவின் மேல் அளப்பரிய அன்பும் பற்றுதலும் ஏற்பட்டுவிடும். எனவே உடனடியாக விட்டு விடுவான்.

-----------------------------


தை மாத கிருத்திகையில் பழனியே குலுங்கிக் கொண்டிருந்தது.  பேருந்திலிருந்து இறங்கியதும் மடியில் முடிந்து வைத்திருந்த அன்னாசித் துண்டை மூத்தவளைத் தேடிப் பிடித்துக் கொடுத்தாள். வாங்காமல் சினுங்கியதும் கன்னத்தை இடித்துகாத்துல போற மாரி இருக்கற..அதையும் இதையும் தின்னா தான ஓடி ஆடி வெளையாட முடியும். ‘ என வாய்க்குள் வைத்துத் தினித்தாள். துப்பினால் என்ன நடக்கும் என்பது தெரியும். எனவே மென்று விழுங்கினாள். வனிதா கண்டுகொள்ளாமல் கூட்டத்தை விலக்கி போய்க் கொண்டிருந்தாள்.


மனித சமுத்திரத்தில் கால் வைக்கக்கூட இடமின்றி தவித்துக் கொண்டிருந்தனர். தீர்த்தக் குடங்கள், காவடிகள், பாத யாத்திரைக்காரர்களின் நெரிசல், அரோகரா கோஷங்கள்.  அம்மாஇங்கேயே இருக்கறன். நீங்க போய்ட்டு வாங்க..’ என குதிரை வண்டிகள் நிறுத்தியிருந்த இடத்திலிருந்த நிழலில் உட்கார போனாள். அவன் வின்ச் இருக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றான். அலை அலையாக ஆட்கள் நின்று கொண்டிருந்தனர். கூச்சல்கள், சண்டைகள், வசவுகளின் திருவிழாவாக இருந்தது. மூன்று மணி நேரத்திற்கு பின் மேலே சென்று முடித்து வருவதற்குள் பொழுதே போய்விட்டது. அங்கும் கூட அவனுக்குள் ஊசலாட்டம் இருந்து கொண்டு தான் இருந்தது. மை தீட்டிய, முத்துகள் கட்டிய கொலுசுடன் ஓட முயன்ற குழந்தையைப் பார்த்துபுள்ளய புடிங்க..’ என வனிதா கத்தினாள். அக்குழந்தையின் அம்மாபுள்ள இல்லபையன் தான்..’ என பெருமையோடு தூக்கி மேலே போட்டுக் கொண்டாள். கிழவிக்குக் கேட்டிருக்கக் கூடாதே முருகாஎன இருவரும் மனதிற்குள் வேண்டுவதற்குள், ‘அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்..சும்மா நானும் தண்டமா பொறந்துட்டன்னா ஆச்சா..’ என வெடுக்கென கேட்டாள். நரகத்திலிருப்பவள் சிரிப்பது போல பிறரை பார்த்து வனிதா பற்களைக் காட்டினாள். ஆனால் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. பெண் பிள்ளை என்றில்லை மூன்றுமே பையன்களாக இருந்திருந்தாலும் அம்மாவின் குணம் இப்படியே தான் இருந்திருக்கும், அதை உறவினர் வீடுகளில் அவள் நடந்து கொண்ட முறையை வைத்து தெரிந்து கொண்டனர்.





தரிசனம் முடித்து வெளியே வந்ததும் அம்மா தன் கையிலிருந்த திருநீரை முருகனை வணங்கி ஒவ்வொருவருக்கும் பூசி விட்டாள். வனிதாவுக்கு பூசும் போது பிராத்தனைகள் பலமாக இருந்திருக்கும் போல. சில நிமிடங்கள் பிடித்தன. ‘போதும் அத்தைஎன்ற போது அவளுக்கு நாக்கு தளுதளுத்துக் கொண்டது. இறங்குவதற்குள் அதே நாக்கால் மனதிற்குள் திட்டும்படி அம்மா நடந்து கொண்டாள்.


பசியால் பிள்ளைகள் துவண்டு போயிருந்தன. அடிவாரத்தில் சுமாராக இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பேருந்து நிறுத்தத்திற்கு ஆட்டோ பிடித்தான். முன்னதில் வனிதாவையும் குழந்தைகளையும் அனுப்பி விட்டு அடுத்த ஆட்டோவுக்கு கை காட்டுவதற்குள் கட்டணக் கழிப்பிடம் நோக்கி அம்மா செல்வதை பார்த்தான். இதை விட்டால் இனி அமையாது என நினைத்தவனாகத் தனியாக ஆட்டோவில் ஏறினான். திரும்பி போய் கூப்பிட்டுக் கொள்ளலாமா என்கிற ஊசலாட்டம் அவனை அலைகழித்தது. ஆனால் போதும் என கண்களை மூடிக் கொண்டான். தேம்பி தேம்பி அழுபவனை ஆட்டோக்காரன் ஏதும் கேட்கவில்லை.


அவன் வந்து சேரக் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இறங்கியதும் வனிதா கேட்டவைகளுக்கு பதிலே சொல்லவில்லை. பேருந்துகளில் இடமேயில்லை. இப்போது அம்மா என்ன செய்து கொண்டிருப்பாள் என ஓடும் எண்ணத்தை அறுத்தெறிந்தான். மெதுவாக வனிதாவுக்கு புரிவது போலப் பட்டது. அவள் பையை அங்கேயே வீசி எறிந்து,


‘படுபாவி..என்னத்த பண்ணி வைச்சுருக்க...வூட்டுக்கு பெரிய மனுஷி இல்லாம இதுகள எப்படி வளத்தறது..? நான் கட்டியிருக்கற சேலை உன்ற அம்மா வாங்கிக் கொடுத்தது தான். இதா மூணுகளும் மொட்டை அடிச்சு காது குத்தறதுக்கு பணம் போட்டு வைச்சுக்கறா அந்த கிழவி..போன வாரம் தான் சொல்லிக்கிட்டு கிடந்தா...எப்படி ஒனக்கு மனசு வந்துச்சு..எங்கயா இருந்தாலும் கூட்டிக் கொண்டாந்து நிறுத்துனா தான் இடத்தை வுட்டு நகருவேன்..எனப் பேசிக் கொண்டே போனாள்.


அவளும் குழந்தைகளை இழுத்துக் கொண்டு அவனுடன் தொத்தியபடியே திரும்பவும் அடிவாரத்துக்கு வந்தாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கூட்டம் மோதிக்கொண்டே இருந்தது. அரைமணி நேரம் கழித்து வின்ச் உள்ள இடத்திற்கு அருகே கால் நீட்டி கண்ணீருடன் அம்மா அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.


போலீஸ்காரன் அவனைக் கண்டதும்எங்க போனப்பாதேடு தேடுன்னு தேடி துடிச்சு போயிருச்சுப்பா இந்த அம்மா..நான் தான் கூப்புட்டு உட்கார வைச்சிருக்கறன்..’ என்றதும் அவரை நோக்கிக் கை கூப்பினான்.


அம்மா வருவாளா என்கிற திகில். ஆனால் கையைப் பற்றி எழுந்துபோலாம்..’ என்றபடியே அருகில் வந்ததும்ஒனக்கு பாரமா போயிட்டனா சாமி..’ என்றாள். அவனது சமாதானங்கள் பொய்கள் எதுவும் அவள் காதில் ஏறவேயில்லை.


வீடு சேரும் வரை ஒருவரும் பேசிக் கொள்ளவுமில்லை. பதற்றத்தில் ஓயாமல் அவன் தான் பேசிக் கொண்டே இருந்தான். குழந்தைகள் சோர்ந்து தூங்கி விட்டிருந்தன. வழக்கமாக அம்மாவின் அருகில் படுக்கும் இரண்டாமவள் கூட அவர்களுடனேயே உறங்கி விட்டாள். அவனும் வனிதாவும் உறங்கவேயில்லை. பட்டென்று விளக்கு போடுவது தெரிந்தது.  அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கொண்டே அம்மா நிற்பதை போர்வையின் துளை வழியே பார்த்தான். அணைக்கப்பட்டதும் கண் மூடினான்.


காலையில் அவனே அம்மாவுக்கு காப்பி எடுத்துக் கொண்டு கதவைத் திறந்தான். உறங்குகிறாள் போலும். தொட்டு எழுப்பினான். அம்மாவின் உடல் குளிர்ந்து கிடந்தது.

(என் ‘விருந்து’ கதைத்தொகுப்பில் இக்கதை இடம்பெற்றுள்ளது)